

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'பேட்ட' படத்தின் தணிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளது.
2019 பொங்கலை முன்னிட்டி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'பேட்ட' திரைப்படம் வெளியாகவுள்ளது. சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, நவாசுதின் சித்திகி, பாபி சிம்ஹா, முனீஸ்காந்த் ராமதாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று படத்துக்கான எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் படத்துக்கு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன. தற்போது அதை உறுதிபடுத்தும் வண்ணம் படத்தின் தணிக்கை விவரங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
படத்தில் எந்த காட்சியும் நீக்கப்படவில்லை. மாறாக அங்கங்கு வசனங்களில் வரும் கெட்ட வார்த்தைகளுக்கு மட்டும் ஒலி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு அதற்கேற்றவாரு மாற்றப்பட்டுள்ளது. மேலும் இரண்டு இடங்களில் துப்பாக்கியால் சுடும் காட்சியும், ரத்தக்கறை காட்டப்படும் காட்சியும் மாற்றியமைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 'பேட்ட' 171.54 நிமிடங்கள் நீளமுடைய படம். கடந்த 21-ஆம் தேதி படத்தின் தணிக்கை முடிந்துள்ளது.
பொங்கலுக்கு 'பேட்ட' படத்துடன் வெளியாகும் 'விஸ்வாசம்' படத்துக்கு U சான்றிதழ் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.