

‘சாமி 2’ படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துவரும் படம் ‘கடாரம் கொண்டான்’. ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிக்கும் இந்தப் படத்தில், அக்ஷரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மகாவீர் கர்ணா’ என்ற படத்தில் நடிக்கிறார் விக்ரம். தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் பட்ஜெட், 300 கோடி ரூபாய். மிகப் பிரமாண்டமாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.
‘என்னு நிண்டே மொய்தீன்’ என்ற மலையாளப் படத்தை இயக்கிய ஆர்.எஸ்.விமல், இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்தை நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. வரலாற்று ஆக்ஷன் படமாக இது உருவாகிறது.
விரைவில் தொடங்க இருக்கும் இந்தப் படத்துக்கான சிறப்பு பூஜை, திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் நேற்று (டிசம்பர் 3) நடைபெற்றது. இந்த பூஜையில் நடிகர் சுரேஷ் கோபி, பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.