

கமல் நடிக்கவிருக்கும் 'த்ரிஷ்யம்' தமிழ் ரீமேக்கில் ஸ்ரீதேவி நடிக்கவில்லை என்று இயக்குநர் ஜீது ஜோசப் கூறியுள்ளார்.
மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான 'த்ரிஷயம்' படத்தின் தமிழ் ரீமேக் விரைவில் தொடங்க இருக்கிறது. 'த்ரிஷ்யம்' படத்தை இயக்கியம் ஜீது ஜோசப், தமிழ் ரீமேக்கையும் இயக்க இருக்கிறார்.
தென்காசி பின்னணியில் இப்படத்தின் கதை நிகழ்வது போல தமிழில் தயாராக உள்ளது. இப்படத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. மீண்டும் 'மூன்றாம் பிறை' கூட்டணி என்று இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கவிருக்கும் ஜீது ஜோசப் "இப்படத்தில் யார் எல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஸ்ரீதேவி இப்படத்தில் நடிக்கவில்லை. தற்போதைக்கு கமல் மற்றும் 'த்ரிஷ்யம்' படத்தில் நடித்த ஆஷா சரத் ஆகியோர் மட்டுமே ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
இதனால் மீண்டும் இணையும் கமல் - ஸ்ரீதேவி என்ற செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள். 'த்ரிஷ்யம்' படத்தில் தெலுங்கு மற்றும் கன்னட ரீமேக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.