

'தானா சேர்ந்த கூட்டம்' வசூல் மற்றும் விமர்சனங்கள் குறித்து மீண்டும் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
2018-ம் ஆண்டு தொடக்கத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ், கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. அனிருத் இசையமைத்த இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்தது. இப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும், இப்படம் வெளியாகி சில மாதங்கள் கழித்து வசூல் ரீதியாக இது தோல்விப் படம் என்ற போது, விக்னேஷ் சிவன் கடுமையாக சாடினார். நாயகன் சூர்யா விக்னேஷ் சிவனுக்கு கார் பரிசளித்த போது, சில தயாரிப்பாளர்களே கடுமையாக விமர்சித்தார்கள்.
தற்போது 2018-ம் ஆண்டு ஹிட்டான மற்றும் ப்ளாப் படங்கள் லிஸ்ட்டை முன்னணி இணையதளங்கள், விமர்சகர்கள் என பலரும் வெளியிட்டுள்ளனர். இதில் அனைவருமே 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தினை ப்ளாப் லிஸ்ட்டில் கூறியுள்ளனர்.
இதனை கடுமையாக தனது ட்விட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். இது குறித்து அவர் கூறுகையில், ''2018-ம் ஆண்டின் டாப் 5, டாப் 10, ஹிட்ஸ், தோல்வி, வசூல் நிலவரங்கள், விமர்சனங்கள், கருத்துகள்.... எல்லாத்தையும் விடுங்க. சூர்யா சாருடன் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை பெரும் உற்சாகத்துடன் உருவாக்கினோம். திரையரங்கில் நிகழும் இந்தத் தருணம் போதும், தானா சேர்ந்த கூட்டம் படத்தில் பணியாற்றிய எங்கள் அனைவருக்கும்'' என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.
2019-ம் ஆண்டில் லைகா நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.