

டைட்டில்ல பேர் போடுறதுல ஜெயலலிதா பிரச்சினை பண்ணினாங்க. கடைசில என் பேரை மூணாவதாதான் போட்டாங்க என்றார் செளகார் ஜானகி
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, தனியார் சேனலுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் பல விஷயங்களை மனம் திறந்து பகிர்ந்துகொண்டார்.
''செளகார்தான் என் முதல் படம். அப்ப எனக்கு 15 வயசு. கல்யாணமாகி, குழந்தையும் இருந்துச்சு. அநேகமா, முதல் படம் அறிமுகமாகும் போதே கையில குழந்தையோட வந்த நடிகை நானாத்தான் இருப்பேன்.
செளகார் எனக்கு மட்டுமில்ல. என்.டி.ஆருக்கும் அதுதான் முதல்படம். அவரோட முதல் ஹீரோயின் நான். என்னோட முதல் ஹீரோ என்.டி.ஆர். அதுக்கு அப்புறம்தான் ஜானகி, செளகார் ஜானகியானேன்.
ஜெமினி கம்பெனில, 'ஒளிவிளக்கு' பண்ணினேன். அது இந்திப்பட ரீமேக். இந்தில மீனாகுமாரி பண்ணின கேரக்டரைத்தான் நான் தமிழ்ல் பண்ணினேன். படத்துல ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்த நல்ல கேரக்டர். எம்ஜிஆருக்கு ஜெயலலிதாதான் ஜோடின்னாலும் கூட, கதையின் படி எனக்கு முக்கியமான கதாபாத்திரம்.
ஆனா, ஜெயலலிதாவும் அவங்க அம்மாவும் பெரிய பிரச்சினை பண்ணிட்டாங்க. டைட்டில்ல, எம்ஜிஆர், அப்புறம் செளகார் ஜானகின்னு பேர் வரக்கூடாது. எம்ஜிஆர், அப்புறம் ஜெயலலிதா, அதுக்கு அடுத்தாப்ல மூணாவதாத்தான் செளகார் ஜானகி பேர் வரணும்னு எஸ்.எஸ்.வாசன்கிட்ட சண்டை போட்ருக்காங்க. இதெல்லாம் எனக்குத் தெரியாது.
ஆனா டைட்டில் பாத்துட்டு எனக்கு பயங்கர ஷாக். வாசன் சார்கிட்ட போய் கேட்டேன். பிடிவாதமா இருந்து கைப்பட எழுதியும் வாங்கிட்டாங்க. தப்பா எடுக்காதீங்க செளகார். டைட்டில்ல அவங்க பேர் உங்க பேருக்கு முன்னால வந்திருக்கலாம். ஆனா படம் பாத்துட்டு உங்க கேரக்டர்தான் பேசப்படும்னு சொன்னார். அவர் சொன்னது போலவே நடந்துச்சு.
அதுமட்டுமா? இறைவா உன் மாளிகையில் பாட்டு செம ஹிட்டு. அதுக்குப் பிறகு எம்ஜிஆர் அமெரிக்கால மருத்துவமனைல இருந்தப்பவும் இந்தப் பாட்டுதான் எங்கே பாத்தாலும் ஒலிச்சிக்கிட்டே இருந்துச்சு.
ஆனாலும் ஒரு கோபம் இருந்துச்சு. நடுவுல பேட்டில அவங்க என்னைத் திட்றதும் நான் ஜெயலலிதாவைத் திட்றதும் தொடர்ந்துக்கிட்டே இருந்துச்சு. வழில அவங்க கார் வருதுன்னா கூட, வண்டியை இந்தப் பக்கம் விடுப்பான்னு சொல்லி பாத்துக்காமலயேதான் இருந்தோம். அப்புறமா, 40 வருஷம் கழிச்சு தப்பையெல்லாம் உணர்ந்து எனக்கு லெட்டர் அனுப்பினாங்க ஜெயலலிதா. 2009-ம் வருஷம்தான் பாத்துக்கிட்டோம்''.
இவ்வாறு செளகார் ஜானகி தெரிவித்தார்.