

சேரன் இயக்கத்தில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிக்கும் 'திருமணம் சில திருத்தங்களுடன்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.
'பாரதி கண்ணம்மா', 'பொற்காலம்', 'தேசிய கீதம்', 'வெற்றிக் கொடி கட்டு', 'பாண்டவர் பூமி', 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி', 'பொக்கிஷம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சேரன்.
தங்கர் பச்சான் இயக்கிய சொல்ல மறந்த கதை படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர், தான் இயக்கிய 'ஆட்டோகிராப்', 'தவமாய் தவமிருந்து', 'மாயக்கண்ணாடி', 'பொக்கிஷம்' ஆகிய படங்களிலும் நாயகனாக நடித்தார். 'பிரிவோம் சந்திப்போம்', 'ஆடும் கூத்து', 'ராமன் தேசிய சீதை', 'யுத்தம் செய்', 'முரண்', 'சென்னையில் ஒரு நாள்', 'மூன்று பேர் மூன்று காதல்' என பிற இயக்குநர்களின் படங்களிலும் நடித்தார்.
இதைத் தொடர்ந்து சர்வானந்த், நித்யா மேனன் நடிப்பில் 2015-ம் ஆண்டு 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' என்ற படத்தை இயக்கினார். அப்படத்தை வெளியிட பெரும் சிரமம் ஏற்பட்டதால், C2H (Cinema 2 Home) என்ற புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கி அதன் மூலம் திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் சி.டி. மூலம் படத்தை வெளியிட்டார்.
அதற்குப் பிறகு படம் இயக்காமலே இருந்துவந்தார். தன்னிடம் பெரிய நடிகர்கள் யாருமே கதை கேட்பதில்லை என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாகச் சாடியிருந்தார் சேரன். மேலும், பொருளாதார ரீதியாகவும் அவருக்கு சில கஷ்டங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் சேரன் படம் இயக்குவதாகக் கூறப்பட்டது. ஆனால், அதன் அடுத்தகட்ட முன்னேற்றம் குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்த சூழலில் 'திருமணம் சில திருத்தங்களுடன்' என்ற படத்தை சேரன் இயக்குவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கிறார். காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகம் ஆகிறார்.
சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் நடிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பொன்னுவேல் தாமோதரன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொள்கிறார்.
சென்னையில் இன்று நடைபெற்ற விழாவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி இன்று வெளியிட்டார்.