தற்கொலை செய்துகொண்ட விவசாயி: நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழ் சினிமா இயக்குநர்கள்

தற்கொலை செய்துகொண்ட விவசாயி: நேரில் சென்று ஆறுதல் கூறிய தமிழ் சினிமா இயக்குநர்கள்
Updated on
1 min read

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த சோழகன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் (57). இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 5 ஏக்கரில் தென்னை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். அதிலுள்ள தேங்காய்களைப் பறித்து, தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தார்.

கடந்த 16-ம் தேதி வீசிய 'கஜா' புயலினால் சுந்தரராஜின் தென்னந்தோப்பில் உள்ள 400 தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து, பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. மேலும், ஒரு ஏக்கரில் நடப்பட்டிருந்த தேக்கு மரங்களும் சேதமாகின.

இதனால் கடந்த நான்கு நாட்களுக்கும் மேல் விரக்தியில் இருந்த அவர் நேற்று (வியாழக்கிழமை) காலை விஷம் குடித்து, சுடுகாடு அருகே இறந்து கிடந்தார். அப்பகுதியில் சுந்தரராஜை தேடிச் சென்றவர்கள், அவரின் சடலத்தைப் பார்த்துக் கதறி அழுதனர்.

பின்னர் அவருடைய சடலத்தை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக பாப்பாநாடு போலீஸார் விசாரித்து வருகின்றனர். இறந்துபோன சுந்தரராஜுக்கு, அம்சவள்ளி என்ற மனைவியும், சுதாகரன் என்ற மகனும், சுதா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், திருமுருகன் ஆகியோர் சுந்தரராஜின் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அத்துடன், 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும் வழங்கினர். மேலும், பொருளாதார வசதியுள்ளவர்கள் சுந்தரராஜ் குடும்பத்துக்கு உதவி செய்யுமாறும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in