‘கஜா’ நிவாரணப் பணி: ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குப் பணம் அனுப்பும் விஜய்

‘கஜா’ நிவாரணப் பணி: ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குப் பணம் அனுப்பும் விஜய்
Updated on
1 min read

‘கஜா’ புயல் நிவாரணப் பணிக்காகத் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி வருகிறார் நடிகர் விஜய்.

தமிழகத்தைத் தாக்கிய ‘கஜா’ புயலால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளன. பல ஆண்டுகளாக செலவிட்டு வளர்த்த தென்னை மரங்கள், வாழை, கரும்பு உள்ளிட்டவை பெரும் சேதமடைந்துள்ளன. அதிலிருந்து விவசாயிகள் மீள பல ஆண்டுகள் ஆகும். ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் இறந்துள்ளன.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டுவர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது விஜய்யும் நிவாரண உதவிகள் செய்யத் தொடங்கியுள்ளார். முதலாவதாக, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கு 4.50 லட்ச ரூபாய் அனுப்பப்பட்டு வருகிறது. இதுவரை 9 வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது.

இப்பணத்தை வைத்து தேவையான நிவாரண உதவிகளை உடனடியாகத் தொடங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எத்தனை வங்கிக் கணக்குகளுக்குப் பணம் அனுப்பப்படும், மொத்தமாக எவ்வளவு பணம் விஜய் கொடுத்துள்ளார் என்ற முழுமையான விவரம் இன்று (நவம்பர் 20) மாலையில் தெரியவரும் என்று விஜய் தரப்பினர் தெரிவித்தனர்.

தன்னுடைய வங்கிக் கணக்குக்கு 4.50 லட்ச ரூபாய் வந்திருப்பதாக, ரசிகர் மன்றத்தினர் வெளியிடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஏற்கெனவே கேரளாவில் வெள்ளம் வந்தபோது, அங்குள்ள தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்குப் பணம் அனுப்பி, நிவாரணப் பணிகளை மேற்கொண்டவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in