‘கஜா’ புயல் பாதிப்பு: விக்ரம் ரூ.25 லட்சம் நிதியுதவி

‘கஜா’ புயல் பாதிப்பு: விக்ரம் ரூ.25 லட்சம் நிதியுதவி
Updated on
1 min read

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்க, நடிகர் விக்ரம் 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்.

‘கஜா’ புயலில் இருந்து மீண்டு வர தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்து வருகின்றனர். சூர்யா, கார்த்தி, ஜோதிகா உள்ளிட்ட நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த உதவி செய்யப்பட இருக்கிறது. மேலும், நடிகர் விஜய் சேதுபதி 25 லட்ச ரூபாயும், சிவகார்த்திகேயன் 20 லட்ச ரூபாயும், இயக்குநர் ஷங்கர் 10 லட்ச ரூபாயும் அளித்துள்ளனர். கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாயை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளின் வங்கிக் கணக்குக்கு தலா 4.50 லட்ச ரூபாய் பணம் அனுப்பி, தேவையான உதவிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார் விஜய். ரஜினியும் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் தன்னுடைய ரசிகர் மன்றம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்க இருக்கிறார். இன்று (நவம்பர் 21) இரவு சென்னையில் இருந்து பொருட்கள் லாரிகளில் புறப்படுகின்றன.

லைகா புரொடக்‌ஷன்ஸ் ஒரு கோடியே ஒரு லட்ச ரூபாயை நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இந்தத் தொகை வழங்கப்பட இருப்பதாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தெரிவித்துள்ளது. இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண உதவியாக வழங்குவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விக்ரம். முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு இந்தத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in