

தமிழனுக்கு முதுகெலும்பு இருக்கிறது; சாட்சி ஏ.ஆர்.முருகதாஸ் என புகழ்ந்திருக்கிறார் எழுத்தாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத்.
இது தொடர்பாக அவருடைய ட்விட்டரில், "தமிழனின் முதுகெலும்பைக் காணவில்லை என்று கவலைப்பட்டார் கவிஞர் காசி ஆனந்தன். அரசிடம் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதன் மூலம் தமிழனுக்கு முதுகெலும்பு இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறார் இயக்குநர் @ARMurugadoss . @ARMurugadoss வாழ்க ! #ARMurugadoss #SARKAR #sarkarissue" எனப் பதிவிட்டிருக்கிறார்.
முன்னதாக, அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணப் பத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வலியுறுத்தபட்டது. இதற்கு மன்னிப்பும் கோர முடியாது, எழுதித் தரவும் முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.
வழக்கில் தனது வாதத்தை வைத்த அரசுத் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாதப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என அரசுத் தரப்பில் கோரிக்கை வைத்தார்.
ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'சர்கார்' படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்தது, இலவசப் பொருட்களை எரித்தது போன்ற காட்சிகளை அமைத்தது தன் கருத்து சுதந்திரம் என்றும், அரசு கோருவது போல் மன்னிப்பு கோர முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும் இனிவரும் படங்களில் இதுபோன்ற காட்சிகளை அமைக்கப் போவதில்லை என்ற உத்தரவாதமும் அளிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என்ற நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவை டிசம்பர் 13-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸின் துணிச்சலைப் பாராட்டிய நாஞ்சில் சம்பத், தமிழனுக்கு முதுகெலும்பு இருக்கிறது; சாட்சி ஏ.ஆர்.முருகதாஸ் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.