

சாதியை முடிவுக்குக் கொண்டுவர அனைவரும் இணைந்து வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரியில் கடந்த 4 மாதங்களுக்கு முன் சாதி மறுப்புத் திருமணம் செய்த காதல் ஜோடி நந்தீஷ் - சுவாதி இருவரும் மாயமான நிலையில், கர்நாடகாவில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், நந்தீஷ் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். சுவாதி வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்.
இருவரையும் சாதி ஆணவக் கொலை செய்திருக்கலாம் எனக் கருதி, போலீஸார் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாஸ், பெரியப்பா வெங்கடேஷ் மற்றும் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படுகொலைகளுக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொடுமையின் உச்சம். முன்பு ராஜலஷ்மி இப்போதும் நந்தீஷ் - ஸ்வாதி. பல ஆண்டுகளாக தொடர்ந்து இதுவரை இந்த மனிதத் தன்மையற்று செயல்படும் சாதி காண்டுமிராண்டிகளுக்கு முடிவு இல்லாமல் உள்ளது. ஆனால் இதற்கு முடிவு வர வேண்டும். அதற்கான வழியை நாம் அனைவரும் இணைந்து கண்டுபிடிக்க வேண்டும்” என்று பதிவிட்டிருக்கிறார்.