

’சர்கார்’ படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது படக்குழு. இதில் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானதால், முதல் நாள் வசூல் இமாலய சாதனையை படைத்தது.
ஆனால், படம் வெளியானவுடன் இலவசப் பொருட்களை தீயில் போடுவது, வரலட்சுமியின் பெயர் கோமளவள்ளி என இருப்பது போன்ற சில காட்சிகளுக்கு அதிமுகவினர் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர். தற்போது அக்காட்சிகள் நீக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
இந்தச் சர்ச்சைத் தொடர்பாக விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட யாருமே எந்தவொரு விளக்கமுமே தரவில்லை. ஆனால், படமோ உலகளவில் சுமார் ரூ.150 கோடி வசூலை கடந்திருக்கிறது. போட்டிக்கு எந்தவொரு படமுமே இல்லை என்பதால், பல்வேறு மல்டிப்ளக்ஸ்களில் முழுமையாக ‘சர்கார்’ மட்டுமே திரையிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ‘சர்கார்’ படத்தின் பிரம்மாண்டமான வெற்றியை படக்குழு கொண்டாடி மகிழ்ந்திருக்கிறது. இக்கொண்டாட்டத்தில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், வரலட்சுமி, கீர்த்தி சுரேஷ், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் கேக் ஒன்றை வெட்டியிருக்கிறார்கள். படத்தில் பெரும் சர்ச்சையாக உருவாகி நீக்கப்பட்ட காட்சி என்பது இலவசப் பொருட்களான மிக்ஸி உள்ளிட்டவைகளை தீயில் போடுவது தான். அதையே கேக்கில் வடிவமைத்து வெட்டியிருக்கிறார்கள். இந்த கேக்கில் மெழுகுவர்த்தி ஒன்றை வைப்பது போன்று ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூகவலைத்தளத்தில் படமொன்றை பகிர்ந்திருக்கிறார். இது விஜய்யின் கை தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. இந்த வெற்றிக்குக் காரணமான தமிழக அரசை கிண்டல் செய்யும் தொனியில், கேக் வடிவமைத்து வெட்டியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.