

ஜெயம் ரவி நடித்துள்ள ‘அடங்க மறு’ படம், டிசம்பர் 21-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சரண், மிஷ்கின், அமீர் ஆகிய இயக்குநர்களிடம் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘அடங்க மறு’. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ளார்.
சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், சாம் சி.எஸ் இசையமைப்பில், ரூபன் எடிட்டிங்கில் படம் உருவாகியுள்ளது. தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹோம் மூவி மேக்கர்ஸ், இந்தப் படத்தின் மூலம் சினிமாத் துறையில் கால் பதித்துள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14-ம் தேதி தொடங்கிய இதன் படப்பிடிப்பு முடிந்து, ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமையை, க்ளாப் போர்டு புரொடக்ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி பெற்றுள்ளார். இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.
‘அடங்க மறு’ படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர் 21) படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.