

'கத்தி'யை பிரச்சினையில் இருந்து மீட்பதற்காக, முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பது உள்ளிட்ட முயற்சிகளில் நடிகர் விஜய் தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது.
அதேவேளையில், செப்டம்பர் 18-ஆம் தேதி நடைபெறும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வி.ஐ.பி.-க்கள் பலரும் தயக்கம் காட்டி மறுத்துள்ளனர்.
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கத்தி' படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படம் ஆரம்பிக்கும்போதே அறிவித்துவிட்டார்கள். தற்போது, சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு, விரைவில் ஹைதராபாத்தில் நடைபெற இருக்கிறது. அத்துடன் மொத்த படப்பிடிப்பும் செப்.15 தேதியோடு நிறைவு பெறுகிறது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்காவுக்கு எதிராக தற்போது பல்வேறு தமிழர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், செப்டம்பர் 18-ஆம் தேதி சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முதலில் லண்டனில் நடைபெறுவதாக இருந்த இசை வெளியீட்டு விழாவை, தற்போது சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள்.
முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முயற்சி
'கத்தி' இசை வெளியீட்டு விழா அன்று, தமிழர் அமைப்புகள் எதுவும் ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருக்க, தமிழக அரசின் உதவியை நாட இருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி, இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரமுகர்களை அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். ஆனால், இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றால் தங்கள் மீது தேவையில்லாத விமர்சனம் எழும் என்று வி.ஐ.பிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
'தலைவா' படம் போல் அல்லாமல், குறிப்பிட்ட தேதியில் வெளியாக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டிருக்கிறார் விஜய். ஆனால், முதல்வர் தரப்பில் இருந்து இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.
இந்தப் பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்டப் பணிகள் என படம் சம்பந்தமான பணிகள் அனைத்தையும் துரிதப்படுத்த முடிவு செய்திருக்கிறது படக்குழு.
செப்டம்பர் 18 ஆம் தேதி லீலா பேலஸ் அல்லது ஐ.டி.சி க்ராண்ட் சோழா இரண்டில் ஏதாவது ஓர் இடத்தில் 'கத்தி' இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றால் மட்டுமே உறையில் இருந்து 'கத்தி' கச்சிதமாக வெளியே வருமா என்பது தெரியவரும்.