

தங்கள் பெயரை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருத்தப்படும் ஒரு இணையதளம் தமிழ்ராக்கர்ஸ். புதிய தமிழ் படங்கள் கள்ளத்தனமாக இதில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. பல வருடங்கள் முயற்சித்தும் இந்த தளத்துக்கு பின்னால் செயல்படுபவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை.
இந்நிலையில், அவ்வபோது, தமிழ் ராக்கர்ஸ் சில தமிழ் பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு சவால் விடுவதாக ட்விட்டரில் பதிவுகள் பகிரப்படும். உங்களுக்கு முன் நாங்கள் படத்தை வெளியிடுவோம் என்றெல்லாம் சில சமயங்களில் அந்தப் பதிவுகளில் இருக்கும். இப்படி தைரியமாக, வெளிப்படையாக பைரசி நடப்பது குறித்த விமர்சனங்களும் எழாமல் இல்லை.
சமீபத்தில் ‘சர்கார்’, ‘2.0’ படங்களை வெளியிடுவோம் என்ற அறிவிப்பு தமிழ் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தற்போது, இது போல சமூக வலைதளங்கலில் பகிரப்படும் பதிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் முகப்பில் வைக்கப்பட்டுள்ள சின்ன பெட்டியில், இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
“ட்விட்டரோ, மற்ற சமூக வலைதளங்களிலோ நாங்கள் இல்லை. சமூக வலைதளங்களில் எங்கள் பெயரை பயன்படுத்தி யாராவது பதிவிட்டால் அது போலியே. அது போன்ற ஐடிக்களை, அவர்கள் பரப்பும் வதந்திகளை நம்பாதீர்கள்”என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.