

‘2.0’ படத்தில் ரஜினி தனது கெட்டப்களுக்காக எப்படி மெனக்கெட்டார் என்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இந்திய அளவில் பெரிய முதலீட்டில் உருவாகியுள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட மாதங்களாக நடைபெற்ற கிராபிக்ஸ் பணிகள் ஒருவழியாக முடிவடைந்து, நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று அறிவித்துள்ளது படக்குழு. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இப்படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர் தணிக்கை அதிகாரிகள்.
இப்படத்தில் ‘எந்திரன்’ படத்தின் வசீகரன் கதாபாத்திரம், சிட்டி உள்ளிட்ட சில கெட்டப்களில் நடித்துள்ளார் ரஜினி. இக்கதாபாத்திரங்களின் கெட்டப்களுக்காக எப்படி ரஜினி மெனக்கெட்டார், படப்பிடிப்பு தளத்தில் எப்படி ஒத்துழைத்தார் என்பதை சிறு வீடியோவாக வெளியிட்டுள்ளது படக்குழு.
இதற்கு ரஜினி ரசிகர்கள் பலரும் தங்களுடைய வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவின் மூலம் புதிதாக இன்னொரு கதாபாத்திரத்தையும் ரஜினிக்காக உருவாக்கியுள்ளார் ஷங்கர் என்று தெரிகிறது. இதனை ‘அடுத்து’ என்று குறிப்பிட்டு, ரஜினி ‘க்கூ.... க்கூ...’ என்று சொல்வது போல முடித்துள்ளனர். இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் உள்ளிட்ட விவரங்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது.