

நவம்பர் 16-ம் தேதி வெளியீட்டில் ’திமிரு புடிச்சவன்’ திரைப்படம் உறுதியாக இருப்பதால், ’செய்’ திரைப்படம் தங்களது வெளியீட்டில் பின்வாங்கியுள்ளது.
தீபாவளி தினத்தன்று வெளியாகியுள்ள ‘சர்கார்’ திரைப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. அப்படத்தைத் தொடர்ந்து நவம்பர் 16-ம் தேதியனறு ‘காற்றின் மொழி’, ‘செய்’, ‘சித்திரம் பேசுதடி 2’ மற்றும் ‘உத்தரவு மகாராஜா’ ஆகிய படங்கள் வெளியாக தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதியளித்தது.
இப்படங்களோடு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘திமிரு பிடிச்சவன்’ படமும் வெளியாகும் என விளம்பரப்படுத்தினார்கள். இதனால், நவம்பர் 16-ம் தேதியன்று வெளியாகவுள்ள இதர படங்களின் தயாரிப்பாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தார்கள். இந்த விவகாரம் தொடர்பாக ‘திமிரு புடிச்சவன்’ படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
ஆனால், எச்சரிக்கையைத் தாண்டி ‘திமிரு புடிச்சவன்’ நவம்பர் 16-ம் தேதி வெளியீடு என்று விளம்பரப்படுத்தி வருகிறது. இதனால் நகுல் நடிப்பில் உருவாகியுள்ள ‘செய்’ திரைப்படம் தங்களுடைய வெளியீட்டு திட்டத்திலிருந்து பின்வாங்கியுள்ளது. திரையரங்குகள் குறைவாக கிடைக்கும் என்பதால் பின்வாங்கியதாக அறிக்கையில் தெரிவித்திருக்கிறது ‘செய்’ படக்குழு.
தற்போது நவம்பர் 16-ம் தேதி வெளியீட்டில் ‘திமிரு புடிச்சவன்’, ‘காற்றின் மொழி’ மற்றும் ‘உத்தரவு மஹாராஜா’ ஆகிய படங்கள் உறுதிப்படுத்தப்பட்டு விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.