

முன்பதிவில் 3 கோடி வசூல், 402 திரையரங்குகள், 1700 காட்சிகள் என கேரளாவில் ‘சர்கார்’ மாபெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளி வெளியீடாக நாளை (நவம்பர் 5) வெளியாகவுள்ளது. தமிழக திரையரங்குகளில் முதல் நாள் டிக்கெட் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே முடிந்தது.
எப்போதுமே, கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அவரது பல படங்கள் கேரளாவில் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களைத் தாண்டி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. ’சர்கார்’ படத்துக்காக 175 அடி உயர கட்-அவுட் வைத்து ஆச்சர்யப்படுத்தினார்கள் கேரள விஜய் ரசிகர்கள்.
இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பே டிக்கெட் விற்பனையில் பெரும் சாதனை நிகழ்த்தியிருக்கிறது ‘சர்கார்’. சுமார் 400-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படம் டிக்கெட் முன்பதிவு வசூல் ரூ. 3 கோடியைக் கடந்திருக்கிறது. பல்வேறு திரையரங்குகளில் அதிகாலை ரசிகர்கள் காட்சிகளாகவும அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
முதல் நாளில் 402 திரையரங்குகளில் 1700 காட்சிகள் திரையிடப்படுகிறது. அதில் 300 காட்சிகள் ரசிகர் காட்சிகளாகவும், 25 காட்சிகள் பெண் ரசிகர்கள் காட்சிகளாகவும், 51 திரையரங்குகளில் 24 மணி நேரம் மூவி மாரத்தனாகவும் ‘சர்கார்’ திரையிடப்படவுள்ளது. இதனை, ‘சர்கார்’ படத்தை கேரளாவில் வெளியிடும் இஃபார் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறது.