

தன்னுடைய ஸ்டுடியோவில் ‘சிட்டி’ ரோபோ ஒன்றை வைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற 29-ம் தேதி ரிலீஸாகும் படம் ‘2.0’. ‘எந்திரன்’ படத்தின் கதாபாத்திரங்களான டாக்டர் வசீகரம் மற்றும் ‘சிட்டி’ ரோபோ என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் ரஜினி. ஹீரோயினாக எமி ஜாக்சனும், வில்லனாக அக்ஷய் குமாரும் நடித்துள்ளனர்.
ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். 3டி-யில் வெளியாகும் இந்தப் படம், இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ‘சிட்டி’ ரோபோ கதாபாத்திரத்துக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘சிட்டி’யின் அசாத்தியத் திறமைகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கவரப்பட்டுள்ளனர்.
‘எந்திரன்’ படம் வெளியானபோது, பெரும்பாலான தியேட்டர்களில் ‘சிட்டி’யின் உருவ பொம்மைகளை வைத்து ரசிகர்களைக் கவர்ந்தனர். தற்போது ‘2.0’ ரிலீஸாக இருப்பதால், மறுபடியும் ‘சிட்டி’ ஃபீவர் தொடங்கியுள்ளது. இசையமைப்பாளரான அனிருத், தன்னுடைய ஸ்டுடியோவில் ‘சிட்டி’ ரோபோவின் உருவ பொம்மை ஒன்றை வைத்துள்ளார். அந்த வீடியோவை, அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதுதான் அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் என்பது குறிப்பிடத்தக்கது.