

ரஜினி திரைப்பட வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லாக இந்தப் படம் அமையும் என்று அவரது ரசிகர்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன் என்று கமல் தெரிவித்திருக்கிறார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில், பல்வேறு திரையுலக பிரபலங்கள் ‘2.0’ குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ திரையிடப்பட்டது. இதில் கமலுடைய வீடியோவும் இடம்பெற்றது கூடுதல் சிறப்பம்சம். அந்த வீடியோவில் கமல் பேசியதாவது:
’2.0’ படக் குழுவினருக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், நண்பர் லைகா சுபாஷ்கரனுக்கும், நண்பர் ரஜினி அவர்களுக்கும், ரஹ்மான் அவர்களுக்கும், அக்ஷய் குமார் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். ரஜினி திரைப்பட வாழ்க்கையில் இன்னொரு மைல்கல்லாக இந்தப் படம் அமையும் என்று அவரது ரசிகர்களைப் போலவே நானும் எதிர்பார்க்கிறேன். அதற்கான வாழ்த்துக்கள்.
உங்கள் உழைப்புக்கான ஊதியம் கண்டிப்பாகக் கிடைக்கும் என்று நண்பர் ஷங்கருக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவர் எவ்வளவு பெரிய உழைப்பாளி என்பது எனக்குத் தெரியும். இந்த படத்தின் தொழில்நுட்பச் சுமையெல்லாம் தன் தோளில் சுமந்து இதை நல்ல ஒரு படமாக செதுக்கியிருக்கும் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
கமல் வாழ்த்தியது சிறப்பம்சம் ஏன் என்றால், அக்ஷய்குமார் கதாபாத்திரத்தில் அர்னால்ட் நடிக்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு அதில் கமலை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஷங்கர் - கமல் இருவரையும் ‘2.0’ தொடர்பாக சந்திக்க வைத்தவர் எழுத்தாளர் ஜெயமோகன். இக்கதையை விட ‘இந்தியன் 2’ பண்ணலாம் என்பதிலேயே கமல் ஆர்வமாக இருந்தார் என்றே ஷங்கர் சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார்.