

தமிழக முதல் நாள் வசூலில் 'சர்கார்' படத்தை விடக் குறைவாகவும், சென்னை வசூலில் சாதனையும் படைத்திருக்கிறது '2.0'.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. இந்தியத் திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
3 வருடத் தயாரிப்பு, கிராபிக்ஸில் தாமதம் என்று பல சோதனைகளைத் தாண்டி நவம்பர் 29-ம் தேதி வெளியானது. பலரும் கிராபிக்ஸ் பிரம்மாண்டம் என்று பாராட்டி புகழ்ந்து வருகிறார்கள்.
ஆனால், '2.0' படத்தின் மிகப்பெரிய பட்ஜெட்டுக்கு, முதல் நாள் வசூல் என்பது படக்குழுவினருக்கு சிறிய அளவில் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. முதல்கட்டத் தகவலாக இந்திய அளவில் சுமார் 70 கோடி அளவுக்கே வசூல் செய்திருக்கிறது. இதன் அதிகாரபூர்வக் கணக்கை படக்குழுவினர் தான் வெளியிட வேண்டும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 20 கோடிக்கு நிகராகவும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மொத்தமாக 19 கோடி வசூல் செய்திருக்கிறது. அதில் வரி போக 12.5 கோடி ஷேராக விநியோகஸ்தர்களுக்கு கிடைத்திருக்கிறது.
இந்தியில் ‘2.0’ திரைப்படம் 20.25 கோடி வசூல் செய்திருப்பதாக, பாலிவுட் திரையுலகின் வர்த்தக நிபுணர் தரண் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
'சர்கார்' படத்தை விடக் குறைவு
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ரஜினி படங்களுக்கு எப்போதே நல்ல ஒப்பனிங் இருக்கும். ஆனால் தமிழகத்தில் '2.0' படத்தின் முதல் நாள் வசூல், 'சர்கார்' மற்றும் 'மெர்சல்' படத்தை விடக் குறைவாக செய்திருக்கிறது.
ஷங்கர் - ரஜினி என்ற மெகா கூட்டணியிலிருந்தும் ஏன் இந்தக் குறைவு என்று விநியோகஸ்தர்களிடம் கேட்ட போது, "நவம்பர் 29-ம் தேதி வேலை நாள். அந்த நாளில் இந்த வசூல் என்பதே பெரிய விஷயம் தான். மேலும், ரஜினியின் முந்தைய 2 படங்களுமே ரசிகர்கள் மத்தியில் போதிய வரவேற்பைப் பெறாததும் இதற்கொரு காரணம். ஆனால், விமர்சனம் நன்றாக இருப்பதால் வார இறுதிநாட்களின் வசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வளவு பெரிய முதலீட்டுக்கு தயாரிப்பு நிறுவனம், மிகப் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தியிருக்க வேண்டும். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்" என்று தெரிவித்தார்கள்.
தமிழகத்தில் '2.0' திரைப்படம் 20 கோடி அளவுக்கே வசூல் செய்துள்ளது. ஆனால், 'மெர்சல்' படம் 23.5 கோடியும், 'சர்கார்' படம் 30 கோடி நிகராகவும் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் '2.0' சாதனை
சென்னையில் முதல் நாள் வசூல் '2.0' திரைப்படம் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. 'சர்கார் ' வசூல் செய்த 2.3 கோடியே சாதனையாக இருந்தது. அதனை 2.64 கோடி வசூல் செய்து '2.0' திரைப்படம் முறியடித்துள்ளது. இந்த வசூல் 3டி கண்ணாடிகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்துடன் சேர்த்தாகும். அப்பணம் இல்லாமல் 2.4 கோடி வசூல் செய்திருப்பதாக கணித்திருக்கிறார்கள் தமிழ்த் திரையுலகின் வர்த்தக நிபுணர்கள்.
இனி வரும் நாட்கள் என்பது '2.0' படக்குழுவினருக்கு மிகவும் முக்கியமாகும். சுமார் 500 கோடி முதலீடு என்பதால், கண்டிப்பாக இந்த வசூல் என்பது மிகக்குறைவே. இதனை எப்படி அதிகப்படுத்தலாம் என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.