

கடந்த வருடம் (2017) மார்ச் மாதம் வெளியான படம் ‘மாநகரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில், சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா, சார்லி ஆகியோர் நடித்தனர். ஜாவித் ரியாஸ் இசையமைத்தார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்தனர்.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இதற்கு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த வருடம் வெளியான தமிழ்ப் படங்களில், முக்கியமான படமாகவும் அமைந்தது.
‘மாநகரம்’ படத்தைத் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது படத்தின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தையும் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார்த்தி தற்போது அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் கார்த்தி ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். இந்தப் படத்துக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பார் கார்த்தி என்று கூறப்படுகிறது.