

எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் என்று ‘காற்றின் மொழி’ பத்திரிகையாளர் சந்திப்பில் ஜோதிகா தெரிவித்திருக்கிறார்.
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த், எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி மஞ்சு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காற்றின் மொழி’. தனஞ்ஜெயன் தயாரித்திருக்கும் இப்படம் நவம்பர் 16-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘தும்ஹாரி சூலு’ படத்தின் ரீமேக் தான் ‘காற்றின் மொழி’ என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஜோதிகா பேசியதாவது:
''எத்தனையோ இயக்குநர்களின் படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ராதாமோகனின் ’மொழி’ படம் எனக்குக் கொடுத்த பாராட்டுகளும் மரியாதையும் எல்லோருக்கும் தெரியும். 2007-ல் ’மொழி’ படம் வந்தது. கிட்டத்தட்ட 10 அல்லது 11 வருடங்களுக்குப் பிறகு ராதாமோகனின் படத்தில் நடித்திருக்கிறேன். ராதாமோகனுக்கும் எனக்கும் அப்படியொரு புரிதல் இருக்கிறது. மிக அற்புதமான இயக்குநர். அதுமட்டுமில்லாமல் நல்ல மனிதர் அவர்.
ரீமேக் படம் எடுப்பது என்பது சாதாரண விஷயமில்லை. 'காற்றின் மொழி' ரீமேக் படம். அதிலும் குறிப்பாக படத்தில் வித்யாபாலனின் மிகச்சிறந்த நடிப்பு பிரமிக்கவைக்கும். ஆனால், இந்தப் படத்தில் நடிக்க வந்தபோது, அதையெல்லாம் மறந்துவிட்டேன். எல்லாவற்றையும் ஓரமாக வைத்துவிட்டுத்தான், அந்தக் கேரக்டரில் நடித்து முடித்தேன்.
இன்னொரு விஷயம், 'காற்றின் மொழி' படத்தில் நான் பாடியிருக்கிறேன். என்னைப் பாட வைத்துவிட்டார்கள். என் குரல் எப்படி, பாடினால் நன்றாக இருக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால் என்னைப் பாடவைத்துவிட்டார்கள்.
மற்றபடி, இந்தப் படம் எனக்கு ரொம்பவே பிடித்துப் போனது. குடும்பம், குழந்தைகள், வேலை என்று இருக்கிற பெண்ணின் கதை இது. சொல்லப்போனால், கணவன் மனைவியின் கதை. இருவருக்குமான புரிதலையும் அன்பையும் அழகாகச் சொல்லியிருக்கிறார் ராதாமோகன்.
கமல் சார் நடிப்பதைப் பார்த்து அப்படியே வாய் பிளந்து வியந்து பார்த்துக்கொண்டே இருப்பேன். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்தேன். ஒரே டேக்கில் எக்ஸ்பிரஷன்ஸ், வசனம் என எல்லாவற்றிலும் பெஸ்ட் கொடுத்துவிடுவார் அவர்.
அப்புறம் விதார்த்தைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கே பேசும்போது, எப்படியெல்லாம் பேசினார். ஆனால் படத்தில் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஒன்றுமே தெரியாதது போல் இங்கே இருக்கிறார். ஆனால், அப்படி போட்டி போட்டுக்கொண்டு நடித்தார்.
எத்தனையோ நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் எல்லா நடிகர்களுடன் நடிக்கும் போதும் ஒரு பாதுகாப்பை உணர்ந்ததில்லை. சூர்யா, அஜித், மாதவன் ஆகியோருடன் நடிக்கும்போது மனதுக்குள் பாதுகாப்பை உணர்ந்திருக்கிறேன். அவர்களின் வரிசையில் விதார்த் பக்கத்தில் நிற்கும் போது, ஒரு பாதுகாப்பு உணர்வு ஏற்படுகிறது. நல்ல மனிதர் விதார்த். என் சினிமா உலக வாழ்க்கையில், என் கெரியரில் 'காற்றின் மொழி', மிக முக்கியமான படம்''.
இவ்வாறு ஜோதிகா பேசினார்