

தான் நடித்த படம் சார்ந்த எந்தவொரு நிகழ்வில் அஜித் கலந்து கொள்வதில்லை. இதனால் அஜித்தை திரையில் காணலாம், படப்பிடிப்பில் காணலாம் அல்லது ஊருக்கு பயணிக்கும் போது விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் மட்டுமே காண முடியும் என்ற சூழல் உருவானது.
இதனால் அஜித் எங்கு வந்தாலும், அவரோடு புகைப்படம் எடுக்க ஒரு கும்பல் சுற்றிக் கொள்ளும். சில மாதங்களுக்கு முன்பு அஜித் தன் குடும்பத்தினருடன் பாஸ்போர்ட் அலுவலகம் வந்த போது, அங்கு ஒரு பெரும் கூட்டமே கூடியது. ஆனால், பெரும் கூட்டம் இல்லாத சமயங்களில் வரும் ரசிகர்களோடு அஜித் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.
சமீபத்தில் சிவா நடிப்பில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார் அஜித். இதனை அறிந்து கொண்டு அஜித் ரசிகர்கள் விமான நிலையத்தில் கூடினார்கள். விமானநிலையத்திற்குள் வந்தவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட அஜித், வெளியே வந்தவுடன் ரசிகர்களைத் தாண்டி அவசர அவசரமாக காரில் ஏறி புறப்பட்டார்.
அப்போது பல கிலோ மீட்டர் தூரம் அஜித் கார் பின்னாலேயே சென்று அவருடன் புகைப்படம் எடுத்திருக்கிறார் கணேஷ் என்ற ரசிகர். அஜித்துடனான சந்திப்பில் நிகழ்ந்தது என்ன என்பதை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் விவரித்திருக்கிறார்.
இது குறித்து கணேஷ் தன் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
”என் வாழ்நாளில் இதோடு நான்கு முறை தலயை சந்தித்து உள்ளேன் இதுவரை புகைப்படம் எடுத்ததில்லை.
ஆனால் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் தலயை சந்தித்தேன் கூட்ட நெரிசலில் கூட தலயுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை
தல அவர்களின் காரை பின் தொடர்ந்தோம் 18Km. சற்று தொலைவு தல கார் நிறுத்த சொல்ல டிரைவர் இறங்கி வந்தார்.தல அழைத்தார். தல கூறியது என்னை நெகிழ வைத்தது.. என் தம்பி உன் பெயர் என்ன என்றார்.கணேஷ் என்றேன்.
தல உடனே கணேஷ் தம்பி இதுமாதிரி பின் தொடர்ந்து வருவதால் விபத்து ஏற்பட்டால் எனக்கு தான் ரொம்ப கஷ்டமா இருக்கும்..இது தவறு என்றார். உடனே Sorry அண்ணா என்றேன். உடனே தல ”வா கணேஷ் போட்டோ எடுத்துக்க.. ரொம்ப Tired ah இருக்கு அப்படியே எடுத்துக்கிறிங்களா?” என்று கேட்டார்.
அதுவே போதும் அண்ணா என்றேன். போட்டோ எடுத்தபின் Viswasam கண்டிப்பா Success ஆகும் சார் என்றேன். Thanks கணேஷ் என்று என் பெயரை மூன்று முறை அழைத்தார். நான் சொர்க்கத்திற்கே சென்று விட்டேன்.
என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் 10.11.2018
குறிப்பு- விஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் புகைப்படம் எடுத்திருந்த நிலையில் படப்பிடிப்பு நிறைவடைந்து வீட்டின் வாசலில் கடைசியாக எடுக்க பட்ட புகைப்படம்.”
இவ்வாறு கணேஷ் தெரிவித்திருக்கிறார். இப்பதிவு சமூகவலைத்தளத்தில் பெரும் வைரலாக பரவி வருகிறது