

காவல்துறையினர் என் வீட்டில் பலமுறை கதவை தட்டினார்கள் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘சர்கார்’. இப்படம் வெளியானவுடன் அதிமுகவினர் சில காட்சிகளுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். இது பெரும் சர்ச்சையாக உருவானதைத் தொடர்ந்து, படக்குழுவினர் அக்காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக, நேற்று (நவம்பர் 7) நள்ளிரவில் சன் பிக்சர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் “முக்கியமான செய்தி: ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய அவரது வீட்டிற்கு போலீஸார் விரைந்துள்ளனர்” என்று தெரிவித்தார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சை உருவானது.
மேலும் “ஏ.ஆர்.முருகதாஸ் எங்கே என்று விசாரித்துவிட்டு, போலீஸார் அவரது வீட்டிலிருந்து கிளம்பிவிட்டனர். ஏனென்றால் அவர் வீட்டில் இல்லை” என்று மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்வீட்டில் தெரிவித்தது.
கைது விவகாரம் தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் “காவல்துறையினர் நள்ளிரவு என் வீட்டுக்கு வந்து, பலமுறை கதவை தட்டினார்கள். நான் அங்கு இல்லாததால் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். இப்போது, என் வீட்டுக்கு வெளியே போலீஸார் இல்லை என்று எனக்கு தெரிவித்தார்கள்” என்று கூறியிருக்கிறார்