

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கப்படவுள்ளது.
’சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து ’இன்று நேற்று நாளை’ரவிக்குமார் மற்றும் ராஜேஷ் ஆகியோரது இயக்கங்களில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். ‘இன்று நேற்று நாளை’ ரவிக்குமார் திரைப்படம் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் படம் என்பதால், அப்படம் வெளியாக அடுத்தாண்டு இறுதியாகும் என தெரிகிறது.
இதன் இடையே ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் ஜனவரி மாதம் முதல் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த மூன்று படங்களைத் தொடர்ந்து, தனது நீண்ட கால நண்பரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். இப்படத்துக்கான கதை விவாதத்தில் தீவிரமாக பணிபுரிந்து வருகிறார் விக்னேஷ் சிவன். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.
முழுக்க காதலை மையப்படுத்தி இப்படத்தை விக்னேஷ் சிவன் எழுதி வருவதாக படக்குழுவினர் சார்பில் தெரிவித்தார்கள்.