

நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் ஜனவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.
சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, லண்டனில் தொடங்கியது. மொத்தப் படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட்டனர்.
இந்தப் படம், பெரும் வரவேற்பைப் பெற்ற ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படப் பின்னணியைக் கொண்டு உருவாகியுள்ளது. காது கேட்காத, வாய் பேச முடியாத ஒரு பெண் எழுத்தாளர் வீட்டில் தனியாக இருக்கும்போது, சைக்கோ கொலைகாரன் ஒருவனிடம் சிக்கிக் கொள்கிறார். அவனிடம் இருந்து அந்த எழுத்தாளர் தப்பித்தாரா? இல்லையா? என்பதுதான் திரைக்கதை.
இந்தியிலும் ‘கொலையுதிர் காலம்’ உருவாகியுள்ளது. நயன்தாரா வேடத்தில் தமன்னா நடித்துள்ளார். தமன்னாவோடு இணைந்து முக்கியக் கதாபாத்திரங்களில் பிரபுதேவா மற்றும் பூமிகா இருவரும் நடித்துள்ளனர். இந்தியிலும் சக்ரி டோலட்டியே இயக்கியுள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் படம் ரிலீஸாகும் என அறிவித்துள்ளனர். ஆனால், என்ன தேதி என்பதை இன்னும் அறிவிக்கவில்லை.