திரை விமர்சனம்- காற்றின் மொழி
வீடு, கணவன், 10 வயது மகன் என அழகான கூட்டுக்குள் அன்பாக வசிப்பவர் ஜோதிகா. இல்லத்தரசி என்பதைத் தாண்டி ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு. ‘பிளஸ் 2கூட பாஸாக முடியாதவள்’ என்று அவரை புறம்தள்ளுகிறது குடும்ப உறவுகள். ஒருநாள் பண்பலை வானொலியின் போட்டியில் பங்கேற்று, அதில் வெற்றியும் பெறுகிறார். அங்கேயே ‘ஆர்ஜே’ ஆகிறார். இதற்கிடையில், ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணியாற்றும் கணவன் விதார்த் படிப்படியாக பணியில் சறுக்க, ஜோதிகா தன் பணியில் உயர, குடும்பத்துக்குள் குழப்பம் வருகிறது. அடுத்தடுத்து வரும் சிக்கல்களை எதிர்கொள்வதும், அதில் இருந்து அவர் மீள்வதையும் அழகாகச் சொல்கிறது திரைப்படம்.
இந்தியில் சுரேஷ் திரிவேணி இயக்கத்தில் வித்யாபாலன் நடிப் பில் வெளியான ‘தும்ஹாரி சுலு’ திரைப்படம் அப்படியே இயக்குநர் ராதாமோகன் கைவண்ணத்தில் ‘காற்றின் மொழி’ ஆகியிருக்கிறது. எப்படிப்பட்ட கதையாக இருந் தாலும் திரைக்கதைக்குள் வணிக அம்சங்களை தேவையின்றி திணிக் காத ராதாமோகன், இப்படத்தில் ஜோதிகாவுக்கு ‘கிளம்பிட்டா விஜயலட்சுமி’ என்று மியூசிக் பில்ட்அப் கொடுக்க அனுமதித் திருக்கிறார்.
மொத்த படத்தையும் தன் தோளில் சுமக்கிறார் ஜோதிகா. பண்பலையின் இரவு நேர நேரலையில் எசகுபிசகாக பேசு கிற ஆண்களை, மனோதத் துவ முறையில் பேசி நல்வழிப் படுத்துவது, ‘குடும்ப பாசம் - வேலையின் நேசம்’ என இரண்டிலும் கம்பீரம் காட்டுவது, தன்னை தரம் தாழ்த்தும் உறவு களுக்கு மத்தியில் பொங்கி வெடிப்பது என ஒவ்வொரு தருணத்திலும் ‘வாவ்’ சொல்ல வைக்கிறார். ‘ஹல்ல்லோவ்’ என்று அவர் சொல்லும் வார்த்தை, தொடக் கத்தில் செயற்கையாக தெரிந் தாலும், நம்மை அறியாமல் மனதில் ஒட்டிக்கொள்கிறது. வானொலியில் பிற ஆண்களுடன் பேசுவதை கணவன் தவறாக கூறும்போது, சுட்டெரிக்கும் ஜோதியாகப் பார்க்கும் அந்த ஒரு பார்வையில் அசத்திவிடுகிறார். சில இடங்களில் மிகைநடிப்பை தவிர்த்திருக்கலாம்.
நாயகியைச் சுற்றி நகரும் கதை என்றாலும், விதார்த் அவருக் கான இடங்களை அழகாக செய் திருக்கிறார். ஆனால், கணவன் - மனைவி ‘கெமிஸ்ட்ரி’ சுத்தமாக எடுபடவில்லை. இருவருக்குமான காட்சிகளில் அன்யோன்யம் அநியாயத்துக்கு மிஸ்ஸிங்.
பண்பலை வானொலியின் நிர்வாகியாக வரும் லட்சுமி மஞ்சு, ராதாமோகனின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் இளங்கோ குமரவேல், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், மயில்சாமி, யோகிபாபு, உமா ஆகியோரும் கவனிக்க வைக்கின் றனர். நட்புக்காக சிம்பு வந்து போகும் காட்சியும் சுவாரசியம்.
மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு, ‘காற்றின் மொழி’யை கண்களின் மொழியாக்கித் தருகிறது. படத்தின் பெரிய பலம் பொன்.பார்த்திபனின் வசனம். ‘‘என்ன பண்றது. அப்ப டிவி பழசு, நீ புதுசு. இப்ப நீ பழசு, டிவி புதுசு’ என்பது போன்ற வசனங்களில் மொத்த அரங்கும் கலகலப்பாகிறது. ஏ.எச்.ஹாசிப் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்.
வீடியோகேமுக்கு பள்ளி மாணவர்கள் எந்த அளவுக்கு அடிமையாகி இருக்கின்றனர் என்ற துணைக் கதை, பிரதான கதையைவிட தீவிரமாக வெளிப் பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
இல்லத்தரசிகளின் வலிகள், உணர்வுகளை இருபாலரும் ஏற்கும் விதத்தில் மெல்லிய நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பதில், நிறை வான கீதமாக ஒலிக்கிறது ‘காற்றின் மொழி'.
