

'ஜிகர்தண்டா' படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் விஜய், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
சித்தார்த், சிம்ஹா,லட்சுமி மேனன், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ஜிகர்தண்டா'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். கதிரேசன் தயாரிப்பில் இப்படம் வெளியானது.
இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர் மற்றும் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட பலரும் 'ஜிகர்தண்டா' படத்திற்கும், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிற்கும் தங்களது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில், படத்தைப் பார்த்துவிட்டு விஜய் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது குறித்து கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்டு கேட்ட போது, "'ஜிகர்தண்டா' பார்த்துவிட்டு நடிகர் விஜய் தொடர்பு கொண்டு பேசியது உண்மைதான். ரொம்ப ஜாலியா, விறுவிறுப்பா பண்ணியிருத்தீங்க. இதே மாதிரியான வித்தியாசமான படங்கள் தொடர்ந்து பண்ணுங்கள் என்றார் விஜய்" என தெரிவித்தார்