

’திமிரு புடிச்சவன்’ படத்தைத் தொடர்ந்து படத்தயாரிப்பை கைவிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார்.
கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘திமிரு புடிச்சவன்’. இப்படத்தை தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்துடன் தனது படத்தயாரிப்பைக் கைவிட விஜய் ஆண்டனி முடிவு செய்திருக்கிறார். இனி மற்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிக்கும் படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
நடிப்பு, படத்தயாரிப்பு, பட வெளியீடு உள்ளிட்ட விஷயங்களில் ஒரே நேரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. இவரது நிறுவனத்தின் தயாரிப்பில் ’நான்’, ’சலீம்’, ’இந்தியா - பாகிஸ்தான்’, ’பிச்சைக்காரன்’, ’சைத்தான்’, ’எமன்’, ’அண்ணாதுரை’, ’காளி’ மற்றும் ’திமிரு புடிச்சவன்’ ஆகிய படங்களைத் தயாரித்திருக்கிறார்.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் போதிய வரவேற்பைப் பெறாதது தான் இதற்கு காரணம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.