மதுபோதையில் இருந்தேனா? - காயத்ரி ரகுராம் விளக்கத்துடன் சாடல்

மதுபோதையில் இருந்தேனா? - காயத்ரி ரகுராம் விளக்கத்துடன் சாடல்
Updated on
1 min read

போதையில் கார் ஓட்டியதாக சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம் தன்னைப் பற்றி பத்திரிகை நிருபர் பொய் செய்தி கொடுத்திருப்பதாகவும் அந்த நிருபர்தான் போதையில் இருந்தார் என்றும் ட்விட்டரில் விளக்கியுள்ளார்.

அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

எதையோ மறைக்க நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும் பத்திரிகையும் பலமானதாக இருக்கலாம். ஆனால், எனது ஆன்மாவைவிட வாழ்க்கையைவிட எதுவும் வலுவானது இல்லை. என்ன வேண்டுமானாலும் எழுதுங்கள். நான் துணிச்சலுடன் வாழ்வேன். இந்த பொய் செய்தியை உருவாக்கிய நிருபர்தான் போதையில் இருந்தார். 

நான் எனது படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் எனது சக நடிகரை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமான வாகன சோதனைக்காக என்னை நிறுத்தினார்கள். அங்கே வாக்குவாதமோ தர்க்கமோ எதுவும் நடக்கவில்லை. அந்த நிருபர் அவர் மனதில் தோன்றியதை எல்லாம் எழுதியிருக்கிறார்.

எனது லைசன்ஸ் மற்ற ஆவணங்கள் வேறொரு பையில் இருந்ததால் அவற்றை அப்போது போலீஸாரிடம் காண்பிக்க முடியவில்லை. அவர்கள் பணியை நான் பாராட்டினேன். அங்கே எனது ரசிகர் ஒருவர் என்னுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். நானேதான் எனது காரை ஓட்டிச் சென்றேன். ஒருவேளை நான் போதையில் இருந்திருந்தால் என்னை எப்படி காரை ஓட்டிச் செல்ல அனுமதித்திருப்பார்கள். 10 நிமிடங்கள்தான் நான் அங்கிருந்திருப்பேன்.

என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் எனக்கு கவலை இல்லை. போதையில் இருந்த அந்த நிருபரை விட்டுவிட்டு எல்லோரும் என்னை குறிவைக்கின்றனர். தனிப்பட்ட சுதந்திரம் என்பதே இங்கில்லை. இருந்தாலும் வேறு முக்கியமான விஷயங்கள் இருப்பதால் அதை கவனிக்கிறேன். கடவுள் அருளட்டும்.

இவ்வாறு காயத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக,  போதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ரகுராமுக்கு போலீஸார் அபராதம் விதித்ததாக செய்திகள் வெளியாகின. 
சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரி அருகே போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ஒரு காரை நிறுத்தியபோது, அதில் நடிகை காயத்ரி ரகுராம் இருப்பது தெரிந்தது. 

அவர் மதுபோதையில் காரை ஓட்டியது சோதனையில் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் காவலர் ஒருவர் காயத்ரியின் காரை ஓட்டி அவரை வீட்டில் பாதுகாப்பாக கொண்டுபோய் சேர்த்தார் என்று தகவல்கள் வெளியாகின.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in