

டெல்டா மாவட்டங்கள் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு எழ வேண்டும் அதுவும் பலத்துடன் எழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 15-ல் கஜா புயல் ஆடிய கோரத் தாண்டவத்தில் காவிரி டெல்டா பகுதிகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், வேதாரண்யம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், திரைத்துறை பிரபலங்கள் பலரும் டெல்டாவுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தனது குழுவினருடன் களப்பணி செய்யச் சென்றுள்ளார்.
அங்கிருந்தபடி அவர் தொலைக்காட்சி வாயிலாக பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியிருப்பதாவது:
''கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில் நிவாரணப் பொருட்களை வழங்குவதற்காக நான் என் குழுவினருடன் வந்துள்ளேன். இங்கே வந்து நேரில் பார்த்தபோதுதான் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரிகிறது. பல லட்சக்கணக்கான மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. இங்கு மின்சார சேவை சீராவதற்கே இரண்டு மாதங்கள் ஆகும்போல் தெரிகிறது.
அரசாங்கமும், சமூக ஆர்வலர்களும் இந்தப் பகுதிகளில் மீட்புப் பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், எவ்வளவு பணிகள் செய்தாலும் இங்கு போதாதுபோல் இருக்கிறது. சேதம் அவ்வளவு பலமாக இருக்கிறது. இயல்பு நிலை திரும்ப பல மாதங்களாகும்.
டெல்டா மாவட்டங்கள் புயல் பாதிப்பிலிருந்து மீண்டு எழ வேண்டும். அதுவும் பலத்துடன் எழ வேண்டும். அதற்கு நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
லட்சக்கணக்கான தென்னை மரங்களும் அவற்றிலிருந்து தேங்காய்களும் கீழே விழுந்து கிடக்கின்றன. ஆனால், இதுதான் வேளை என்று சில வியாபாரிகள் குறைந்த விலையில் தேங்காயைக் கொள்முதல் செய்கின்றனர். இது மிகவும் தவறு. வழக்கமான விலையிலேயே வாங்க வேண்டும். இதை விற்றுக்கொடுக்க நாம் உதவ வேண்டும். ஒருங்கிணைத்துத் தர வேண்டும். உலகுக்கே சோறு போட்டவர்கள் டெல்டாவாசிகள். இன்று நாம் அவர்களுக்கு உதவ வேண்டும்.
அரசாங்கம் இங்கு உள்ள மண் வளத்துக்கு ஏற்ப பயிரிடக் கூடிய குறுகிய கால பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை சொல்லி உதவ வேண்டும்".
இவ்வாறு ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்தார்.