

என்னுடைய கதைக்கருவைத் திருடி ‘திமிரு பிடிச்சவன்’ படத்தை எடுத்துள்ளனர் என எழுத்தாளர் ராஜேஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடிப்பில் நேற்று (நவம்பர் 16) ரிலீஸான படம் ‘திமிரு பிடிச்சவன்’. ‘நம்பியார்’ படத்தை இயக்கிய கணேசா, இந்தப் படத்தை இயக்கினார். ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் இருவருமே இந்தப் படத்தில் போலீஸாக நடித்துள்ளனர்.
இந்தப் படம், தன்னுடைய கதைக்கருவைத் திருடி எடுத்த படம் எனக் குற்றம் சாட்டியுள்ளார் பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளரான ராஜேஷ் குமார்.
இதுதொடர்பாக ராஜேஷ்குமார் தன் ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
“சென்ற வருடம் நான் ‘ஒன் இந்தியா’வில் எழுதிய ஆன்லைன் தொடர் ‘ஒன் + ஒன் = ஜீரோ’ தொடர்கதையின் அடிப்படைக் கருவான, 18 வயதுக்குக் குறைவான சிறுவர்களை ப்ரைன் வாஷ் செய்து, தமக்கு வேண்டாதவர்களைக் கொலைசெய்து, சட்டத்தின் பிடியில் இருந்து சமூக விரோதிகள் எப்படி தப்பித்துக் கொள்கின்றனர் என்பது பற்றி எழுதி இருந்தேன்.
அந்தக் கருவை அப்படியே காப்பியடித்து ‘திமிரு புடிச்சவன்’ திரைப்படத்தை எடுத்துள்ளனர். இவர்கள் எப்போது திருந்துவார்கள்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ராஜேஷ் குமார்.
இந்தப் பதிவுக்குக் கீழே, அவருக்கு ஆதரவாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.