சர்கார் சர்ச்சை: தமிழக அரசை சாடிய கமல்

சர்கார் சர்ச்சை: தமிழக அரசை சாடிய கமல்
Updated on
1 min read

மீண்டும் உருவாகியுள்ள 'சர்கார்' சர்ச்சை தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை சாடியிருக்கிறார் கமல்

2018-ம் ஆண்டு தீபாவளிக்கு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'சர்கார்'. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

இப்படம் தொடங்கப்பட்டதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது. இறுதியில் கதைத்திருட்டு  சர்ச்சையையும் கடந்தே படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசையும், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் 'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருப்பதாகவும், அதை நீக்கும் வரை படத்தை திரையிடக்கூடாது என்றும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தமிழக போலீஸார் தன்னை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கோரி நவம்பர் 9-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்று (நவம்பர் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தை வைத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், 'சர்கார்' படத்தில் அரசின் திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை வைத்தார். இதனால் மீண்டும் சர்ச்சை உருவானது.

மீண்டும் உருவாகியுள்ள 'சர்கார்' சர்ச்சை தொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் “சர்கார் படத்துக்கு மத்திய தணிக்கைத் துறை சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனாலும் அரசு மக்களின் கருத்து சுதந்திரத்தில் தைரியமாக தலையிடுகிறது. பாசிசம் இதற்கு முன் வீழ்த்தப்பட்டுள்ளது. மீண்டும் அது நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in