

பாஜக பிரமுகர்களுடன் இருக்கும் புகைப்பட விவகாரம் தொடர்பாக சின்மயி கடுமையாகச் சாடி நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார்.
தற்போது மீ டூ ஹேஷ்டேக் இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீது மீ டூ புகார்கள் வந்தன.
சின்மயி புகார் சொன்ன நாள் முதல் ஏன் இத்தனை வருடங்களுக்குப் பின் புகார் சொல்ல வேண்டும் என்ற கேள்வியைத் தொடர்ந்து பலரும் கேட்டு வருகின்றனர். சிலர் ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய வைரமுத்துவைப் பழிவாங்கவே பாஜக ஆதரவாளர்கள் சின்மயியைத் தூண்டிவிட்டுள்ளனர் என்றும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், அண்மையில் பாஜக பிரமுகர்களுடன் சின்மயி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அதை வைத்து சின்மயியைப் பலரும் இணையத்தில் கேள்வி எழுப்பி வந்தார்கள்.
அதற்கு சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்த பதில்களின் தொகுப்பு:
''அந்தப் புகைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக மகளிர் தின நாளில் எடுக்கப்பட்டது. பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசச் சென்றிருந்தேன். நானேதான் அந்தப் படங்களை ட்வீட் செய்திருந்தேன். ஊடக நண்பர்களே! இதை மீடியா க்ரூப்களில் ஷேர் செய்கிறீர்களே பொதுப் புத்தி இருக்கிறதா? இவற்றையெல்லாம் மேற்கொள்ள யார் உங்களுக்கு நிதியுதவி செய்கிறார்கள்?
சமூகம் என்பது ஆண்களும் பெண்களும் இணைந்து வாழ்வதற்கான இடமே. ஆனால், இங்கு பெண்ணைப் பாலியல் சீண்டல் செய்யும் நபர்கள் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றனர். பலாத்காரமே செய்தாலும்கூட விருது வழங்கிக் கொண்டாடுகிறார்கள். இத்தகைய ராட்சசன்களை அழிக்க இன்னும் எத்தனை தீபாவளி காத்திருக்க வேண்டுமோ?
இந்தப் படத்தைப் பகிரும் அனைவரையுமே கேட்கிறேன். உங்களுக்கு மூளை இருக்கிறதா? இல்லை ஞாபக மறதி ஏற்பட்டிருக்கிறதா? ஆதார் மீது எனக்கு நம்பிக்கையில்லை. நான் அதைப் பலமுறை விமர்சித்திருக்கிறேன். உங்களுக்குத்தான் மறதி. பெயர் பற்ற பத்திரிகையாளர்கள்கூட ஆண்களுக்கு எதிராக துணிச்சலாகப் பெண்கள் பேசினால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையிலேயே நடந்து கொள்கின்றனர்.
அரசியல், ஆன்மிகம் எனப் பலதுறை ஆண்கள் மீது புகார்கள் உள்ளன. ஆனால், பெண்கள் மீதே குறை கூறி சதி சாயம் பூசி தப்பு செய்தவர்களைக் காப்பாற்ற எத்தனை கூட்டுக் களவாணித் தனங்கள்?
நான் எனது கதையைச் சொல்லி என் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் தூண்டுகோலாக இருந்துள்ளேன். ஆனால், பத்திரிகையாளர் சந்திப்புகளில் என்னைப் பலரும் கடிந்துகொண்டு அவமானப்படுத்தினார்கள். மனநலக் காப்பகங்களில் இருக்க வேண்டிய சதிகாரர்களின் மனங்களில் உதித்த கேள்விகளுக்கு நான் பதில் சொல்லும் கட்டாயத்துக்கு உள்ளானேன்''.
இவ்வாறு சின்மயி பதிவிட்டுள்ளார்.