

ஓய்வுக்கு ஆசைப்பட்டேன் ‘2.0’ படப்பிடிப்பில் ரஜினியின் உழைப்பை பார்த்து முடிவை மாற்றினேன் என்று ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்நிகழ்வில் பல்வேறு திரையுலக பிரபலங்கள் வீடியோ வடிவில் எழுப்பிய கேள்விக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார். இதில் முதலாவதாக இசையமைப்பாளர் அனிருத்தின் கேள்வி கேட்கப்பட்டது. ’இத்தனை ஆண்டு பயணத்தில் எந்த ஹீரோவுக்கு பணியாற்ற ரொம்ப பிடித்திருந்தது’ என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேட்டார்.
அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியதாவது:
10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பதில் சொல்லிவிட்டேன். சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றவே ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
ஒரு பெர்சானிலிட்டிய லைக் பண்ணனும்னா அவர் வாழ்க்கையில் எங்கிருந்து எங்கு உயர்ந்திருக்கிறார், எத்தகைய கடின நிலைகளைக் கடந்திருக்கிறார், எப்படி இந்த உயரத்தை அடைந்தார், எதையெல்லாம் அவர் சொல்லித் தருகிறார், எங்கிருந்து எந்த உயரத்துக்குப் போகிறார் என்றெல்லாம் தெரிய வேண்டும்.
அதை நான் ரஜினி சாரிடம் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அவரது ஆன்மிக சிந்தனைகள் பிடிக்கும். அப்புறம் இந்த வயதிலும் அவர் தொழிலில் காட்டும் ஈடுபாடு.
நான் ஆஸ்கர் வென்றவுடன் ஓய்வுக்கு ஆசைப்பட்டேன். 40 வயதில் ரிட்டையர் ஆக வேண்டும் என நினைத்தேன். ஆனால், 2.0 படப்பிடிப்புக்குச் சென்றிருந்தபோது செட்டில் அவரது உழைப்பைப் பார்த்தேன். அப்போதே எனது முடிவை மாற்றிவிட்டேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என நினைத்தேன்
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.
அதேபோல் காஜல் அகர்வாலின் கேள்விக்கு, "இசை என்பதே ஒரு அருள். அந்த அருள் எனக்குக் கிடைத்திருக்கிறது. அதை வழங்கிய எனது தந்தைக்கும் இறைவனுக்கும் நன்றி செலுத்துகிறேன். அதுவே எனது இன்ஸ்பிரேஷன்" என்றார்.