

ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடித்துவரும் படம் ‘எல்.கே.ஜி.’. பிரபு இயக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதையை ஆர்.ஜே. பாலாஜி எழுதி இருக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் ஆர்.ஜே. பாலாஜி. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் இருப்பதால், இதனை விளம்பரப்படுத்தும் பணியில் இறங்கியிருக்கிறது படக்குழு.
நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இப்படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகும் என்பதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. அதற்கு ரசிகர் ஒருவர், “இப்படத்துக்கு தற்போதைய ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கலாம். தயாராக இருங்கள்” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், “அத நம்பித்தான் இருக்கோம். விளம்பரப்படுத்த பெரிதாக பட்ஜெட் இல்லை” என்று கிண்டல் தொனியில் பதிலளித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. ஐசரி கணேஷ் தயாரித்திருக்கும் ‘எல்.கே.ஜி.’ படத்துக்கு விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார்.