

'மெர்சல்' படத்துக்கு தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ள மேஜிக் நிபுணரின் வீடியோவால் சர்ச்சை உருவாகியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகர்வால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இப்படத்தில் மேஜிக் நிபுணராக ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விஜய். அவர் பங்கேற்ற ஒரு சண்டைக்காட்சியும் வெளிநாட்டில் படமாக்கியிருந்தது படக்குழு. இந்தச் சண்டைக்காட்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
மேஜிக் நிபுணர் விஜய் பங்கேற்ற சண்டைக்காட்சிகளில் பணிபுரிந்த ராமன் சர்மா என்பவர் தனக்கு இன்னும் தயாரிப்பு நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் பேசும் போது, பின்னணியில் உள்ள தொலைக்காட்சியில் அவர் பணிபுரிந்த ‘மெர்சல்’ சண்டைக்காட்சிகள் ஓடிக் கொண்டிருந்தது.
வீடியோ வெளியிட்டது மட்டுமன்றி, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளிக்கும் தனக்கும் நடந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடலையும் ஸ்கிரீன் - ஷாட்டையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
இவரது இந்த இரண்டு பதிவுமே ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. ட்விட்டரில் உள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணியைக் குறிப்பிட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.