

19 வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘சர்வம் தாள மயம்’ படம், டிசம்பர் மாதம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சர்வம் தாளமயம்’. ஜீ.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வினீத், டிடி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
31வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. மேலும், தனக்கு நெருக்கமான நண்பர்களுக்கும் இப்படத்தை திரையிட்டுக் காட்டி வருகிறார் ராஜீவ் மேனன்.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குநர்கள் வசந்த பாலன், விக்னேஷ் சிவன், பாலா உள்ளிட்டோர் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டி வருகின்றனர். டிசம்பர் மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 28-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. ‘விருமாண்டி’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படங்களைப் போல இந்தப் படமும் ‘லைவ் சிங்க் சவுண்ட்’ என்று சொல்லக்கூடிய நேரடி ஒலிப்பதிவுக் காட்சிகளில் படமாக்கப்பட்டுள்ளது.