

தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என ஜீ.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வால் பலியான அனிதாவின் மரணக் கதையை மையமாக வைத்து ‘அநீதி’ என்ற குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ‘ராஜா ராணி’ பாண்டியன், பிரதீப் கே.விஜயன், லல்லு, கேப்ரிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கே.சி.பால சாரங்கன் இசையமைத்துள்ள இப்படத்துக்கு, விஸ்வா மற்றும் ஹரி பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
அநீதிக்குத் தீர்வு மரணம் அல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இப்படம். ஸ்ரீராம் காஞ்சனா தங்கராஜ் என்பவர் இயக்கி இருக்கும் இப்படத்தின் திரையிடல், சென்னையில் நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட ஜீ.வி.பிரகாஷ், “இந்தக் குறும்படம் ரொம்ப முக்கியமானது. இந்தப் படத்தைப் பாதிக்கு மேல் என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், முடிவை பாஸிட்டிவாக அமைத்தது சந்தோஷமாக இருந்தது. நீட் என்பதை யார் கொண்டு வந்தார்களோ, அவர்களே அதை வைத்துக் கொள்ளட்டும். தமிழ்நாட்டுக்கு அது தேவையில்லை.
நான் அனிதாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். அதனால் அந்த வலி எனக்கு அதிகமாக இருக்கிறது. அந்தக் கலக்கம் இன்னும் என்னை விட்டுப் போகவில்லை. இந்தப் படத்தின் கதையோட்டம் எப்படி இருந்தாலும், படத்தின் முடிவு மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார்.