

‘கஜா’ புயலால் இதுவரை 63 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஓட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஏராளமான தன்னார்வலர்களும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்தப் புயல் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சினிமாத்துறையினரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 50 வீடுகளைக் கட்டித் தருவதாகத் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், “கஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்த்து வேதனை அடைந்தேன். எவ்வளவோ நல்ல உள்ளம் கொண்டவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும், அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்.
ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து, நிர்கதியாய் நிற்கும் ஒரு குடும்பம் பற்றி பார்த்து வேதனை அடைந்தேன். அந்தக் குடிசை வீட்டை அழகாகக் கட்டித்தர எவ்வளவு ஆகும்..? மிஞ்சிப்போனால் ஒரு லட்சம் ஆகும்.
அந்த வீடு மட்டுமல்ல, இதுமாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப்பட்ட 50 வீடுகளை கட்டித்தர உள்ளேன். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் எங்களைத் தொடர்பு கொண்டால், நானே நேரடியாக பாதிக்கப்பட்டப் பகுதிக்குச் சென்று வீடு கட்டித்தந்து, அவர்கள் வாழ்வுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள். நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன். ஒரு தனியார் தொலைக்காட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
அன்பு பத்திரிகை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்... உங்கள் பார்வைக்கு இதுமாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்” எனத் தெரிவித்துள்ளார்.