சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு மீம்ஸ்: பதிலடி கொடுத்த பிரசன்னா

சிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு மீம்ஸ்: பதிலடி கொடுத்த பிரசன்னா
Updated on
1 min read

சன் லைஃப் டிவியில் ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார் நடிகர் பிரசன்னா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் அவர்தான் தொகுத்து வழங்கினார்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இதற்கான ப்ரமோ வீடியோ, கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) வெளியானது.

அதைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், 2011-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தபோது, சிறப்பு விருந்தினராக பிரசன்னா கலந்து கொண்டார். ஆனால், தற்போது (2018) பிரசன்னா நிகழ்ச்சித் தொகுப்பாளராக நிற்க, சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் என்பது போன்ற மீம்ஸை உருவாக்கி, சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.

இன்று (நவம்பர் 22) மாலை 7 மணிக்கு ‘கனா’ படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. அதற்குக் கீழே இந்த மீமை கவியரசு என்பவர் பகிர்ந்துள்ளார்.

அந்த மீமுக்கு கீழே, “இதோ என் கருத்து. சிவகார்த்திகேயன் அற்புதமான தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிக்கிறது. அவர் ஒரு சுமாரான நடிகர். அதிகம் வெற்றிகள் பார்க்காதவர். சிவா, தமிழ் சினிமாவின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரில் ஒருவர்” என சீனிவாசன் என்பவர் தெரிவித்துள்ளார்.

அதற்குப் பதிலளித்துள்ள பிரசன்னா, “அன்புள்ள சீனி, நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அப்படியே இருக்கட்டும். அதை நான் முழுநேர வேலையாகச் செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கிறது.

நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றால், வெற்றிபெற இன்னும் அவகாசம் உள்ளது. வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும். வெறுப்பை/அன்பைச் சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in