அக்‌ஷராவின் அந்தரங்கப் படங்கள் வெளியாகக் காரணம் முன்னாள் காதலரா?

அக்‌ஷராவின் அந்தரங்கப் படங்கள் வெளியாகக் காரணம் முன்னாள் காதலரா?
Updated on
1 min read

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாக, அவரது முன்னாள் காதலர் காரணமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்கப் புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகின. அப்படங்கள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகப் பரவின. இதுதொடர்பான செய்திகளும் இணையத்தில் வெளியாகின.

இந்த விவகாரம் தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக்‌ஷரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அதில், தனது அந்தரங்கப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் அக்‌ஷராவின் முன்னாள் காதலருக்குத் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்‌ஷரா ஹாசனின் முன்னாள் காதலரான தனுஜ் விர்மானி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

“என்னிடம் அக்‌ஷராவின் அந்தரங்கப் புகைப்படங்கள் இருந்தது உண்மைதான். எங்களுக்குள் 4 வருடப் பழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு அந்தப் படங்களை அக்‌ஷரா எனக்கு அனுப்பினார். அதனை நான் என் கைபேசியில் இருந்து அழித்துவிட்டேன்.  அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியானதற்கும் எனக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை" என்று தனுஜ் போலீஸ் தரப்பில் கூறியுள்ளார்.

தனுஜ் விர்மானி, நடிகை ரதி அக்னி கோத்தாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், தனுஜின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ''அக்‌ஷராவைப் பிரிந்து ஓராண்டு கடந்த நிலையிலும் இருவரும் நட்பில் இருக்கிறார்கள். தனுஜ் அப்படிச் செய்திருந்தால் எப்படி இருவரும் நட்பில் இருக்க முடியும்? தற்போது அக்‌ஷராவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை தனுஜால் புரிந்துகொள்ள முடிகிறது. அவருக்கு எல்லா விதத்திலும் துணை நிற்கவே தனுஜ் விரும்புகிறார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in