

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கியுள்ளது. அடுத்த ஆண்டு (2019) பொங்கலுக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, சசிகுமார், மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர் நடித்திருக்கிறார்கள். மொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை இந்தப் படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். வருகிற டிசம்பர் 9-ம் தேதி இசை வெளியீடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக, டிசம்பர் 3-ம் தேதி முதல் பாடலும், 7-ம் தேதி இரண்டாவது பாடலும் வெளியாகும் எனவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.
‘பேட்ட’ படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுதான் அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் என்பது குறிப்பிடத்தக்கது.