

‘தளபதி 63’ படத்துக்கு ராசியான நம்பராக 3 அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.
‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போதைக்கு ‘தளபதி 63’ என்று அழைக்கப்பட்டு வருகிறது.
ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூபன் எடிட்டராகவும், முத்துராஜ் கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.
இந்தப் படத்துக்கும், 3 என்ற நம்பருக்கும் ராசி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப் பற்றிய சுவாரசிய தகவல்களைப் பார்க்கலாம்.
‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்கிறார் விஜய்.
அடுத்த வருடம் (2019) தீபாவளிக்கு ‘தளபதி 63’ படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ 2017-ம் ஆண்டு தீபாவளிக்கும், ‘சர்கார்’ 2018-ம் ஆண்டும் தீபாவளிக்கும் ரிலீஸானது. எனவே, தொடர்ச்சியாக மூன்றாவது முறை தீபாவளிக்கு விஜய் படம் ரிலீஸாக இருக்கிறது.
விஜய் நடித்த ‘உதயா’ மற்றும் ‘அழகிய தமிழ் மகன்’ ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே இதற்கு முன்பு இசையமைத்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மெர்சல்’ படத்துக்கு இசையமைத்தார். தொடர்ந்து ‘சர்கார்’ படத்துக்கும் இசையமைத்தார். ‘தளபதி 63’ படத்துடன் சேர்ந்து தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக விஜய் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
அதேபோல, ‘மெர்சல்’ மற்றும் ‘சர்கார்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்துக்கும் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார் விவேக்.