

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘2.0’. நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘2.0’ படம் குறித்து அக்ஷய்குமார் பேசியதாவது:
’2.0’ படம் ஒரு பாடம். இப படத்தில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். ஷங்கர் என்ற அறிவுஜீவியிடம் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். ஷங்கர் இயக்குநர் மட்டுமல்ல அவர் ஒரு விஞ்ஞானி. இந்தப் படத்துக்கு நான் மேக் அப் போட்டதுபோல் எந்தப் படத்துக்கும் நான் மேக் அப் போட்டதில்லை. என் ஆயுளுக்கான மேக்கப்பை இந்த ஒரே படத்துக்கு போட்டுவிட்டேன். மேக் அப் போட 3 மணி நேரம் ஆகும். மேக் அப் கலைக்க 1.5 மணி நேரம் ஆகும். ஆனால் எல்லா வலிக்கும் இந்தப் படம் பொருததமானது. அத்தனை வலிக்கும் பதில் இருக்கிறது.
இவ்வாறு அக்ஷய்குமார் பேசினார்.
மேலும், இந்த விழாவில் உரையைத் துவக்கும் போது தமிழில் பேசி அசத்தினார் அக்ஷய் குமார். ”எனது உச்சரிப்பு தவறாக இருந்தால் மன்னிக்கவும். 2 மூன்று மணி நேரம் பிராக்டீஸ் பண்ணேன். ரெடியா?” என்று கேட்டுவிட்டு தனது பேச்சைத் தொடங்கினார்.
”வணக்கம் சென்னை. மகிழ்ச்சி. பாலிவுட் நடிகரான நான் பேரும் புகழும் நிறைந்த ரஜினி சார், ஷங்கர் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சாருடன் பணியாற்றியது ஒரு பெரும் அரிய வாய்ப்பு. மகிழ்ச்சி. நன்றி” என்று பேசினார் அக்ஷய்குமார்