

மருந்து விற்பனை பிரதிநிதியாகப் பணிபுரிபவர் சமுத்திரக்கனி. தேவை களைச் சுருக்கிக் கொள்வதுதான் மகிழ்ச்சி என்று கருதுபவர். அவரது மனைவி ரம்யா பாண்டியன். ஐ.டி.யில் வேலை செய்பவர். கார்ப்பரேட் கலாச்சாரத்தை விரும்புபவர். அன்பான குடும்பம், அழகான இரட்டைக் குழந்தைகள் என வாழ்க்கை நகர்கிறது. இருவரும் ஓடியாடி உழைப்பதால், குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போகிறது. ஐ.டி. வேலையை விடுவதற்கு ரம்யா மறுப்பதால், சமுத்திரக்கனி ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ ஆக மாறி, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு, குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறார். பின்னர், மனைவியின் ஈகோவால் வீட்டை விட்டு வெளியேறுகிறார். வாகனக் கடன், வீட்டுக் கடன் எல்லாமாக சேர்ந்து, ரம்யாவை ஆபத்தின் எல்லையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. அப்படி என்ன ஆபத்து நிகழ் கிறது? அன்பான வாழ்க்கையில் நிம்மதி ஏன் பறிபோனது என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைக்கதை.
பெருநகர வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், சிக்கல்களை மிக லாவகமாக சொல்கிறார் இயக்குநர் தாமிரா. உயர் நடுத்தர குடும்பத்தின் தேவை கள், கடன் ஒரு குடும்பத்தை எப்படி சிக்கி சின்னாபின்னமாக்கும், பணம் இல்லாமல் நடுத்தெருவில் ஆண் மகன் நின்றால் என்னவாகும் போன்ற விஷயங்களைத் தொட்டிருப்பதற்காக அவரைப் பாராட்டலாம்.
‘வாழுறதுக்காக வேலை பாக்குறமா, வேலை பாக்குறதுக்காக வாழுறமா?’, ‘ஒரு நல்ல கணவன் - மனைவி சண்டையோட படுக்கைக்கு போகக் கூடாது; சண்டையோட காலையில எழுந்திருக்கக் கூடாது’ - என படம் நெடுகிலும் வரும் கருத்துகளால் கவனம் ஈர்க்கிறார்.
அவர் சொல்லவரும் விஷயமும் தேவை யானது, அர்த்தமுள்ளது. ஆனால், அதை அழுத்தமாக, வலுவாக சொல்லாதது பெரும் குறை. மேலோட்டமான கதை நகர்வாலும், நாடகத்தனமான காட்சியமைப்புகளாலும், இவை அனைத்தும் பார்வையாளரிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து செல்கின்றன.
குழந்தைகள் வளர்ப்பின் இன்றைய சிக்கல்கள், பணியிடத்தில் பாலியல் சீண்டல், கடன் வாங்குவோர் எப்படியெல்லாம் நெருக் கடிக்கு ஆளாகின்றனர் என்பதை எல்லாம் சொல்லிச் செல்லும் இயக்குநர், வீட்டில் இருப்பது மட்டுமே பெண்களுக்கு பாதுகாப்பு என்பதுபோல கதையை கொண்டுசென்றது ஏன் என்பது தெரியவில்லை.
சமுத்திரக்கனிக்கு வழக்கமான, பழக்க மான கதாபாத்திரம். குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் - கெட்ட தொடுதல் பற்றி சொல்லித் தருவது, மகளுக்கு கதை சொல்லிக்கொண்டே பயணிப்பது, குழந்தை தூங்க வேண்டும் என்பதற்காக டிடிஆரிடம் கெஞ்சுவது, பணம் பறிக்கும் அவரிடம் இயலாமையுடன் கூடிய ஆவேசத்தில் பொங்குவது என நல்ல தந்தையை கண்முன் நிறுத்துகிறார்.
‘ரொம்ப நல்லவன்டா நீ’ என்கிற மாதிரி பாத்திரங்களில் பாந்தமாக பொருந்திவிடக் கூடியவர் சமுத்திரக்கனி. பிரதான கதைகளில் ஓரிரு காட்சிகளில் இப்படி வரும்போது கவரவும் செய்வார். ஆனால், ஒட்டுமொத்த படமும் இதேபோல வருவதால், அவரது ‘தேவதை’ பாத்திரம் ஒருகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்துகிறது.
ஆடம்பர வாழ்க்கை வாழத் துடிக்கும் பெண்ணாக ரம்யா பாண்டியன் உணர்ந்து நடித்திருக்கிறார். அகரமுதல்வனாக வரும் மாஸ்டர் கவின் பூபதி, ஆதிராவாக வரும் பேபி மோனிகா ஆகியோர் இதயத்தில் இடம்பிடிக்கின்றனர்.
சந்தேகத்தில் மனைவியை திட்டிக் கொண்டே இருக்கும் இளவரசு, ரசிகர் என்ற சந்தோஷத்தில் பேசும் அறந்தாங்கி நிஷா கதாபாத்திரங்கள் செயற்கையாக உள்ளன. சமுத்திரக்கனிக்கு அடைக்கலம் கொடுக்கும் ராதாரவி, ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு தன்னையே பலிகொடுக்கும் சுஜா வாருணி, மனைவி இறந்த சோகத்தை கண்களில் தேக்கி நிற்கும் பிரஜின், மிரட்டல் என்ற பெயரில் உதார் விடும் ஹரீஷ் பெரடி ஆகியோருக்கு படத்தில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.
ஜிப்ரான் இசையும், காசி விஸ்வநாதன் எடிட்டிங்கும், விஜய் மில்டன் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.
உணர்வுபூர்வமாக இருக்கவேண்டிய காட்சிகள், தத்துவம் பேசும் வசனங்களா லேயே நகர்வது திரைக்கதையின் ஓட்டத்தை பாதிக்கிறது.
தமிழ் திரைப்படங்களில் குடும்பப் பாங்கான கதைகள் அருகி வருகின்றன. அந்த வகையில் வரவேற்கலாம். ஆண் வேலைக்குப் போக வேண்டும், பெண் இல்லத்தரசியாக வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நியாயப்படுத்துவது படத் தின் பெரிய பலவீனம். அதை தவிர்த்து, கணவன் ஹவுஸ் ஹஸ்பெண்டாகவே தொடர்ந்து, ‘டைட்டிலுக்கு’ நியாயம் சேர்த்திருந்தால், ஆண் தேவதையை ஆரத் தழுவி வரவேற்றிருக்கலாம்.