

’மீடூ’- ல் வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியாக இருக்கிறது என்று நடிகை லைலா வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.
பெண்கள் தங்களுக்கு ஏற் பட்ட பாலியல் ரீதியான துன் புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீ டூ' (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில் இந்தியாவில் அரசியல், திரையுலகம், ஊடகம் என பல்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன.
தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது சின்மயி, சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை, அர்ஜுன் மீது ஸ்ருதிஹரிஹரன் உள்ளிட்டோர் புகார் தெரிவித்திருக்கிறார். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
இந்நிலையில், ‘மீடூ’ ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் குறித்து நடிகை லைலா கூறியிருப்பதாவது:
’மீடூ’- ல் வெளியாகும் தகவல்கள் எல்லாம் அதிர்ச்சியாக இருக்கிறது. பாலியல் தொல்லைகளுக்கு முடிவு கட்ட பெண்கள் களத்தில் இறங்கியிருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து துறைகளிலுமே பெண்களுக்கு பாதிப்புகள் உள்ளன. சினிமா துறை மட்டுமல்ல, பெரிய கார்ப்பரேட் அலுவலகத்தில் கூட பாலியல் தொல்லைகள் இருக்கிறது.
பெண்களை குறைத்து மதிப்பிடிவதை ஆண்கள் நிறுத்த வேண்டும். சுயலாபத்துக்காக பெண்களை பயன்படுத்துவதற்கு எதிராக திரண்டு இருக்கிறார்கள். அவர்களை தவறாக நடத்த முயற்சிப்பதே, இழிவான செயல்.
திருமணத்திற்குப் பிறகு நடிக்காமல் இருந்தேன். இப்போது நடிக்க ஆசை வந்திருக்கிறது. நல்ல கதைகள் மற்றும் கதாபாத்திரங்கள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதே போன்று, என் மனதை பாதித்த கதை ஏதேனும் தோன்றினால், பட இயக்கவும் ஆசையிருக்கிறது. ஆனால், கண்டிப்பாக தயாரிக்க மாட்டேன்.
இவ்வாறு லைலா தெரிவித்திருக்கிறார்.