

சமீபத்தில் வெளியான ‘ராட்சசன்’ படத்தைப் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.
விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான படம் ‘ராட்சசன்’. ‘முண்டாசுப்பட்டி’ படத்தை இயக்கிய ராம்குமார் இந்தப் படத்தை இயக்கினார். அமலா பால் ஹீரோயினாக நடிக்க, முனீஸ்காந்த், ராதாரவி, சங்கிலி முருகன், நிழல்கள் ரவி, காளி வெங்கட், வினோதினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர்.
சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான இதற்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த அனைவருமே படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இப்படி ஒரு த்ரில்லர் படம் பார்த்து நீண்ட நாட்களாகி விட்டது என சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஜினியும் படத்தைப் பார்த்து, விஷ்ணு விஷாலுக்குப் போன் செய்து பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் விஷ்ணு விஷால்.
“சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து சர்ப்ரைஸாக உங்களுக்குப் போன் வந்தால், மகிழ்ச்சியில் உங்களால் துள்ளிக் குதிக்காமல் இருக்க முடியாது. ‘ராட்சசன்’ படம் பற்றிப் பேசிய அவர், ‘அற்புதம்... அற்புதம்... அற்புதம்...’ என்று சொன்னார். ‘நடிப்புல தூள் கிளப்பிட்டீங்க’, ‘போலீஸ் யூனிஃபார்ம்ல செம ஃபிட்’, ‘வில்லன் யாரு? சூப்பர் பாடி லாங்வேஜ்’, ‘இயக்குநர் மற்றும் உங்க காம்போ அருமை’ என்று தெரிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.
‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் ராம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.