

'கத்தி' படத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை என நாம் தமிழ் கட்சி தலைவர் சீமான் ஆவேசமாக கூறினார்.
'கத்தி' படத்தை எதிர்க்காமல் சீமான் அமைதி காப்பதன் பின்னணியில், லைக்கா மொபைல் நிறுவனமே சீமானின் அடுத்த படத்தைத் தயாரிக்கும் திட்டம் இருப்பதாக இணையதளங்களில் பரபரப்பாகச் செய்திகள் அடிபடுகின்றன.
இது குறித்து சீமானிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, "'கத்தி' படத்தில் தமிழர்களுக்கு எதிரான காட்சிகளோ கருத்துகளோ இருந்தால் அதனை எதிர்க்கிற முதல் ஆளாக நான் தான் இருப்பேன். அந்தப் படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதே தெரியாமல் யாரோ கிளப்பும் சர்ச்சைகளுக்காக அந்தப் படத்தை எதிர்க்க நான் ஒன்றும் ஏதும் தெரியாத மூர்க்கன் அல்ல.
தமிழர்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வெளியான மெட்ராஸ் கபே, இனம் உள்ளிட்ட படங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி எப்படிப் போராடியது என்பது எல்லோருக்குமே தெரியும். 'கத்தி' படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை படம் வெளியான பிறகுதான் அறிய முடியும். படத்தின் கதாநாயகனான தம்பி விஜய்யும் இயக்குநரான தம்பி முருகதாசும் நம்முடைய சொந்தத் தமிழ்ப் பிள்ளைகள்.
படத்தைத் தயாரிக்கும் நிறுவனத்தைப் பற்றி ஏதேதோ சொல்லி, 'கத்தி' படத்தை சீமான் எதற்கு எதிர்க்கவில்லை எனக் கேட்பது முட்டாள்தனம். என்னை விரல் நீட்டிக் கேட்பவர்கள் எதற்காக எனக்காகக் காத்திருக்க வேண்டும். அவர்களே வீதியில் இறங்கிப் போராட வேண்டியதுதானே... எல்லோரும் உசுப்பிவிட்டு ரசிப்பதற்கு நான் என்ன கோயில் காளையா..?
என்னுடைய அடுத்த படத்தை லைக்கா மொபைல் தயாரிக்க இருப்பதாக செய்தி கிளப்பும் இணையதளப் புரட்சியாளர்கள் அவர்களின் வேலைகளை விட்டுவிட்டு சினிமாவுக்கு திரைக்கதை எழுத வந்துவிடலாம். கற்பனைகளுக்கு என்று ஒரு அளவில்லையா? அடுத்த படத்துக்கு வாய்ப்பு கேட்டுத் துண்டு போட்டு வைக்கும் வழக்கம் திரைப்படத்துறைக்கு நான் அறிமுகமான காலத்திலேயே என்னிடத்தில் இருந்தது கிடையாது. இப்போதும் இரண்டு வருடங்களாக அண்ணன் கலைப்புலி தாணு என்னைப் படம் பண்ணச் சொல்லி வருகிறார். அப்படியிருக்க அடுத்த நிறுவனத்துக்கு நான் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதையாவது வம்படியாகக் கிளப்பிவிட்டால் சீமான் சிலிர்த்துக் கொண்டு கிளம்பிவிடுவார் என யாரும் கனவு காண வேண்டாம். எதை ஆதரிப்பது எதை எதிர்ப்பது என்பது நானும் என் கட்சியும் முடிவு செய்ய வேண்டிய விசயம்.
'சீமான் எதற்கு ’கத்தி’ படத்தை எதிர்க்கவில்லை?' என பலரும் உசுப்பேற்றுவதற்காக நான் என் சொந்தத் தம்பிகள் மீது பாய முடியாது. லைக்கா மொபைல் நிறுவனம் தமிழ’கத்தி’ல் இல்லை. அப்படியிருக்க அந்த நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்பவர்கள் அந்த நிறுவனம் வர்த்தகத்தை மேற்கொள்ளும் லண்டன் உள்ளிட்ட பகுதிகளில் அதற்கான எதிர்ப்பைக் காட்ட வேண்டும்.
’கத்தி’ படத்தை எதிர்க்கக் கோரி எனக்கோ அய்யா நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்களுக்கோ எவ்வித தகவலும் வராத நிலையில், அதை நான் எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை!" என ஆவேசமாகச் சொன்னார் சீமான்.